வெள்ளி, 1 டிசம்பர், 2017

பள்ளி நூலக வாசிப்பு


பள்ளி நூலக வாசிப்பு   - மு.சிவகுருநாதன்






 

    பாடத்திட்டத்தைத் தாண்டிய வாசிப்பை இன்றைய கல்வியமைப்பு, பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வித்துறை ஆகிய கிட்டத்தட்ட தடையே செய்திருக்கின்றன. தேர்வு மய்யமான மதிப்பெண் கல்வி, பாடநூல் கருத்துகளை மட்டும் மனப்பாடம் செய்து அறிவு கிடைப்பதான ஒரு பாவனைக்குள் சிக்கிச் சீரழிகின்றது இன்றைய சமூகம்.
 

    மாணவர்கள் படிக்கவில்லை என்று குறைபட்டுகொள்ளும் ஆசிரிய சமூகம் புதிதாக என்ன படிக்கிறது என்று கேட்டால் பதிலிருக்காது. படித்துப் பட்டம் பல வாங்கியாயிற்றல்லவா! இனி படிப்பதெப்படி? என்பதே அவர்கள் வாதம். நீள நீளமாக பட்டங்களைப் போட்டுக் கொள்வதோடு அவர்களது அறிவு நின்றுவிடுகிறது.


   பாடத்திட்டம், பாடநூல் தாண்டிய வாசிப்பு சாத்தியப்படும் சூழலை உருவாக்கித் தராத கல்வி நமக்கு தேவையேயில்லை. தேர்வுகள், மதப்பெண்கள் சார்ந்த பாடங்களுக்கு 7 பாடவேளைகள் வேண்டும் என்று கேட்கின்ற அனைவரும் விளையாட்டு, இசை, ஓவியம், நூலக வாசிப்பு போன்ற அனைத்து கல்வி இணைச் செயல்பாடுகளை விழுங்கிவிடுவதுதான் நடக்கிறது.














    பொது நூலகங்களில்கூட சில நல்ல நூல்கள் கிடைக்கும். ஆனால் பள்ளி நூலகங்களில் இருப்பதோ குப்பைகள். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் (RMSA) கீழ் ஒவ்வொரு அரசுப்பள்ளிக்கும் ரூ. 10,000 மதிப்பிலான நூல்கள் வாங்க அனுமதியுண்டு. ‘கமிஷன்’ அடிப்படையில் மாவட்டந்தோறும் வாங்கப்படும் நூல்கள் அனைத்தும் குப்பைகள். இவை மாணவர்கள் வாசிக்க லாயக்கற்றவை. கோடிக்கணக்கான பணம் கல்வித்துறையில் இவ்விதம் ஊழலால் சீரழிகிறது.


     போட்டித்தேர்வுகளுக்கு நூல்களுக்கு வாங்கிக்குவிக்கும் பழக்கமும் உண்டு. NMMS, ஊரகத் திறனாய்வு, NTSE போன்ற போட்டித்தேர்வுகளுக்கும்  “நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்”, என்று ஆசைகாட்டும் சுயமுன்னேற்ற நூல்களும் ஜோதிட உள்ளிட்ட பல்வேறு  மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பல நூற்கள் பள்ளி நூலகங்களில் அடைந்து கிடக்கின்றன. ஒரே நூலை அட்டைப்படம், தலைப்பை மாற்றி வெவ்வேறு பெயர்களில் வெளிவந்த ‘கமிஷன்’ நூல்கள் பலவுண்டு. இதன் மூலம் கல்வி உருப்படுமென்று நம்ப இயலவில்லை.


   மாணவர்கள் விரும்பாத இந்த நூல்களை தலைக்கு ஒன்றாக கட்டி படித்துவருமாறு காட்டாயப் படுத்துவது எவ்வளவோ பெரிய கொடுமை; வன்முறை. இதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. வகுப்பாசிரியர்களைக் கொண்டு இந்த கட்டாயத் திணிப்பை மேற்கொள்வது நியாயமல்ல.


   இதனைத் தடுக்க எங்கள் பள்ளி ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’ பிரிவிற்கு எனது சொந்த நூலகத்திலிருந்து சிறார் கதைகள், சூழலியல், அறிவியல், கல்வி, வரலாறு  தொடர்பான நூல்களை அளித்து வாசிக்கவும் குறிப்பு எழுதி வரவும் சொன்னபோது மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதை அறிய முடிந்தது. இதுவரையில் சுமார் 100 நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அது தொடர்பான சில படங்களும் இப்பகுதியில் வெளியிடப்படுகின்றன.  

திங்கள், 27 நவம்பர், 2017

மெல்லக் கற்போருக்கான செயல்திட்டம் – சமூக அறிவியல்




மெல்லக் கற்போருக்கான செயல்திட்டம் – சமூக அறிவியல்




அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் – 610104, திருவாரூர் – மாவட்டம்.

 
  1. 2017 – 2018 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் மெல்லக் கற்போர் 6 பேர் இனங்காணப் பட்டனர்.
  2. இவர்கள் அனைவருக்கும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (RMSA) மெல்லக் கற்போருக்குக்கான (SLAP) கையேடுகள் வழங்கப்பட்டன.
  3. இவர்களில் ஒருவரைத் தவிர எஞ்சிய ஐவரும் மதிய உணவிற்கு வீடுகளுக்குச் செல்கின்றனர்.
  4. இந்த ஐவரும் மதிய உணவு எடுத்துவர அல்லது சத்துணவு சாப்பிட கேட்டுக் கொள்ளப் பட்டது.
  5. மதிய உணவு இடைவேளையில் சுமார் 15 நிமிடங்கள் ஒதுக்கி அதில் சமூக அறிவியல் கட்டங்களிலிருந்து சில பகுதிகளை தினமும் படிக்க, எழுத ஆலோசனை வழங்கப் பட்டது.
  6. இந்த 6 பேருக்கும் படிப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்க அவர்களது விருப்பத்தின் பேரில் நன்றாக படிக்கும் மாணவர்கள் வழிகாட்டுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
  7. எழுத, படிக்க வாய்ப்புள்ள உரிய தருணங்களில் குழுக் கற்றல்.
  8. இவர்களது வருகைப் பதிவு குறைவாக உள்ளது. தினசரி வருகைப்பதிவையும் சிறப்பு வகுப்பில் பங்கேற்பதையும் உறுதி செய்தல். 
  9. வெள்ளி காலை, மாலை சமூக அறிவியல் சிறப்பு வகுப்புகளில் இவர்களுக்குத் தனிக்கவனம்.
  10. ஆசிரியர் இல்லாத பதிலிப் பாடவேளைகள் மற்றும் விடுமுறை நாள்களில் இவர்களது விருப்பத்தையொட்டி சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சியளித்தல்
     
மு.சிவகுருநாதன், சமூக அறிவியல் பாட ஆசிரியர்
அ.மே.நி.ப., காட்டூர் – 610104.
 

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு


(National Means cum Merit Scholarship)


மு.சிவகுருநாதன்


     மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது. கல்வி உதவித் தொகைக்கான இந்த்தத்  தேர்வு, எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கானது.  அரசு பள்ளிகள், ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும் இந்த தேர்வை எழுத முடியும். சுயநிதி தனியார் பள்ளி மாணவர்கள் இத்தேர்வை எழுத முடியாது.  குடும்பத்தின்  ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 7 -ம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களும்  எடுத்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மாணவர்கள் எனில் 50% போதுமானது.




  குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில்  6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 8 ம் வகுப்பு முதல் +2 வரை தலா ரூ.6 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படுகிறது.


    தேர்வுக்கான பாடத்திட்டம் ஏழாம் வகுப்பு முழுப் பாடத்திட்டமும், எட்டாம் வகுப்பில் காலாண்டுத் தேர்வு வரையிலான பாடத்திட்டமும் இருக்கும். தமிழக அரசு நடத்தும் இந்தத் தேர்வில் வெற்றி பெறும் 6,695 பேருக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப் படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு முடிய இந்த உதவித்தொகையைப் பெற முடியும்.


   இத்தேர்வை எழுத காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் கீழ்க்கண்ட 5 பேர் சார்பிலான விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.


அவர்கள் பின்வருமாறு:


கீர்த்தனா   பா

சுபிதா     

பௌவித்ரா    கா

ரோஜா தஸ்லீம்   

ஹரிதாசன்   


    இம்மாணவர்களுக்கு பள்ளி இடைவேளை மற்றும் காலை, மாலை வேளைகளில் மாதிரி வினாத்தாள்கள் வழங்கி சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.


    தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகவும் வருத்தம் தரக்கூடியது. உடனடியாக மாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி இத்தொகையை மாணவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திட ஆவண செய்திடவேண்டும்.

புதன், 8 நவம்பர், 2017

நவம்பர் 14 – குழந்தைகள் நாள்: ஒரு வேண்டுகோள்


நவம்பர் 14 – குழந்தைகள் நாள்: ஒரு வேண்டுகோள்

 

மு.சிவகுருநாதன்


     ஆசிரியர் தினம் கொண்டாடும் பள்ளிகள் பல குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதில்லை. கல்வியும் பள்ளிகளும் குழந்தைகளுக்கானதாக இல்லை. குழந்தைகள் இவைகளிடமிருந்து அந்நியப்பட்டே உள்ளனர். கல்வியின் அனைத்து தளங்களையும் குழந்தைகளுக்கானதாக மாற்ற இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.


      திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் 300 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இதில் 100 பேர் மேனிலை மாணவர்கள். 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் 200 மாணவர்கள் உள்ளனர். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதாரண மக்களின் குழந்தைகளே இங்கு கல்வி கற்கின்றனர்.


   இப்பள்ளிகளுக்கான தேவைப் பட்டியல் அளவில்லாதது. அவற்றில் சில.


  1. பள்ளி வளாகச் சுற்றுச்சுவர்.
  2. குடிநீர் வசதி.
  3. தண்ணீருடன் கூடிய கழிவறை வசதி.
  4. சமூக விரோதிகளிடமிருந்து பள்ளியைப் பாதுகாக்க இரவுக் காவலர் பணியிடம்.
  5. புதிய, தூய்மையான சத்துணவுக் கூடம்.
  6. கூடுதல் கட்டிடங்கள்.
  7. உடலுக்குக் கேடு விளைவிக்கும் ஆஸ்பெட்டாஸ் கூரை இல்லாத வகுப்பறைகள்.
  8. சிதைலமடைந்த கட்டடங்கள் இடிக்கப் பட்டு வளாகம் தூய்மைப்படுத்தப் படுதல்.
  9. இரண்டு முன்னாள் தமிழக முதல்வர்கள் திரு சி.என்.அண்ணாதுரை, திரு மு.கருணாநிதி ஆகியோர் தொடர்புடைய கட்டடம் ஒன்றைத்தவிர எஞ்சிய  பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திப் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் எடுத்தல்.
  10. மேனிலையில் கணினிப் பிரிவுகள். நிரந்தர ஆசிரியர் பணியிடம். 
  11. மேனிலையில் வரலாறு, பொருளியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகள், அதற்குரிய ஆசிரியர் பணியிடங்கள்.
  12. ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகம்.
  13. மாணவர்களுக்கு கூரையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம்.
  14. புதிய கட்டட இடிபாடுகள் மற்றும் பழுதுகளைச் சீரமைத்தல்.
  15. பள்ளி நூலகத்திற்கு நல்ல நூல்கள், தனி நூலக அறை வசதி.

 

     என நீளும் பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. இவற்றில் பல கருத்துரிமைப் பெட்டியின் வாயிலாக மாணவர்கள் வெளிப்படுத்திய கோரிக்கைகள். இவைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசால் மட்டுமே முடியும். ஏனெனில் அதிகம் செலவாகக் கூடியத் திட்டங்கள் இவை.


       1998, 2008 ஆகிய ஆண்டுகளில் திரு மு. கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது முறையே உயர்நிலை, மேனிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. நபார்டு கடனுதவியின் கீழ் சுமார் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் 9 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் 2016 இல் கட்டப்பட்டுள்ளன. அதற்குரிய இடத்தை தி.மு.க. வினர், முரசொலி அறக்கட்டளை, உள்ளூர் மக்களுடன் இணைந்து வாங்கித் தந்துள்ளனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் மாடியில் இரு வகுப்பறைக் கட்டடமும் ரூ. 6.75 லட்சத்தில் கலையரங்கம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் உள்ளன. இவற்றை நல்ல முறையில் பாதுகாத்து, பராமரிக்க மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பாரின் ஆதரவு தேவைப்படுகிறது.


   பள்ளி நூலகத்திற்கு நல்ல நூல்கள் தேவை. இருக்கின்ற   நூல்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் (RMSA) கீழ் வாங்கப்பட்ட நூல்கள் குழந்தைகளுக்கானதாகவும், தரமானதாகவும் இல்லை என்பது மிகவும் வருந்தற்குரியது.


   பள்ளி மாணவர்களின் குடும்பச் சூழல் நல்ல நூல்களை, நாளிதழ்களை வாங்கிப் படிக்கும் அளவில் இல்லை. மாணவர்களுக்கு நல்ல நூல்களைப் பரிசளிப்பதும், நூலகத்திற்கு நல்ல நூல்களை வழங்குவதும் மிகவும் இன்றியமையாத, நம்மால் இயலும் பணியாக உள்ளது.


   சென்ற மாதம் இப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியை திருமதி உல.சுமதி அவர்கள் தனது சேமிப்பில் இருந்த நூல்களை பள்ளி நூலகத்திற்கு வழங்கினார். அவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.


   நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் (சென்னை) 50% கழிவில் குழந்தைகளுக்காக பல நல்ல நூல்களை விற்பனை செய்கிறது.


   குறைந்த பட்சம் ரூ. 2000 க்கு வாங்கினால் இந்தக் கழிவு கிடைக்கிறது. ரூ. 2000 க்கு ரூ. 4000 மதிப்பிலான நூல்களை வாங்க முடியும். இன்னும் சில நாள்களே இருப்பதால் உடனடியாக செயல்பட வேண்டியுள்ளது. இந்தத் தருணத்தில் இயலாதபட்சத்தில் ஏப்ரல் 23 உலக புத்தக நாளுக்கும் இதேபோல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


   பள்ளி நூலகத்திற்கும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கவும் நூல்களை அன்பளிப்பாக வழங்க முன்வருமாறு இதன்மூலம் வேண்டுகின்றோம். இது குறித்து தங்களது  கருத்துகளையும் எதிர்பார்க்கின்றோம்.

வியாழன், 21 செப்டம்பர், 2017

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) 2017


தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) 2017
 

மு.சிவகுருநாதன்
 

     தேசிய திறனாய்வுத் தேர்வு (National Talent Search Examination) என்பது 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வு ஆகும். இதில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.500 கிடைக்கும். அம்மாணவனுக்கு முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) வரைக்கும் வரை இந்த உதவித்தொகை உண்டு.
 

    இந்த தேர்வை 10 -ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே மட்டுமே எழுத முடியும். 9 -ம் வகுப்பு முழுப் பாடத்திட்டத்திலும், 10 -ம் வகுப்பில் நவம்பர் வரையிலான பாடத்திட்டத்திலும் வினாக்கள் இருக்கும்.    முதலில் மாநில அளவில் ஒரு தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவில் இறுதித் தேர்வும் (CBSE syllabus) நடத்தப்படும்.  ஒருவகையில் இதுவும் நீட் தேர்வு போலத்தான்!
 

   தமிழக அரசு நடத்தும் முதல் கட்டத் தேர்வு மூலம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசியத் தேர்வில் தரப்பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களுக்குள் வந்துவிட்டால் உதவித்தொகை கிடைக்கலாம்.
 

    இதில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 40 இடங்கள் மட்டுமே. குறிப்பிட்ட மாநிலங்களில் தகுதியான மாணவர்கள் கிடைக்காதபட்சத்தில், அதிக மதிப்பெண் பெற்றுள்ள மற்ற மாநில மாணவர்களுக்கும் கூடுதல் இடம் கிடைக்கும். எப்போதாவது தமிழகத்திற்கு கூடுதல் இடம் கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் யாரும் தேர்வாகவில்லை.
 

   இத்தேர்வில் தேர்வாகும்  மாணவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக் கழகங்களில் பட்ட மேற்படிப்பு படிக்கலாம் என்பது இந்தத் தேர்வின் கூடுதல் பலன்.
 

  இத்தேர்வை எழுத வருமான உச்சவரம்பு இல்லை. அனைவரும் எழுதலாம். மாநில அளவிலான தேர்வு இரண்டாக உள்ளது.  
 

SAT (Scholastic Aptitude Test)

   (9, 10 பாடங்களில் இருந்து வினாக்கள்)

MAT (Mental Aptitude Test)

(மனத்திறன் தேர்வு)

 

   இத்தேர்வு எழுத திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 5 மாணவிகள் சார்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின்  பெயர்கள் பின்வருமாறு:
 

  • சந்தியா    
  • அபிதா     
  • காவியா  
  • சஷ்டிதா   கோ
  • லெட்சுமி   
 

   தேர்வுக்கட்டணம் ரூ.50. இத்தேர்வு நவம்பர் 05 (05.11.2017) ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
 

   இம்மாணவர்களுக்கு சென்ற ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் வினாத்தாள்கள் கொண்டு பள்ளியிலேயே சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 2017

ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 2017
                மு.சிவகுருநாதன்


         ஊரகத் திறனாய்வுத் தேர்வு அழைக்கப்படும் இந்தத் தேர்வு, கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. டிரஸ்ட் (TRUST) தேர்வு எனப்படும் இத்தேர்வை 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் எழுதலாம்.

      ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்களும், 50 மாணவிகளும் தேர்வு செய்யப் படுகிறார்கள். அவர்கள் +2 படிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1,000 என நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 4000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.


      1990 லிருந்து 27 ஆண்டுக்களாக இந்தத் தொகை உயர்த்தப்படவில்லை. இதனால் இத்தேர்வுகளில் பங்கு பெறுவோரின் ஆர்வம் குறைந்துள்ளது. இதை உயர்த்தி கணிசமாக தொகையையை வழங்குவதே பொருத்தமாக இருக்க முடியும். பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ. 15000 லிருந்து ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.


    எட்டாம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் இத்தேர்வை எழுத முடியும். ஊரகப் பள்ளி மாணவர்கள் மட்டுமே இத்தேர்வில் பங்கு பெறமுடியும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.


     மொழிப்பாடங்கள் தவிர்த்து எட்டாம் வகுப்புப் பாடங்களிலிருந்து 100 சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வினாக்கள் மட்டுமே கேட்கப்படும். OMR தாளில் வட்டமிட்ட A, B, C, D ஐ பால்பாயிண்ட் பேனாவால் நிழலிட்டுக் (shading) காட்டவேண்டும்.



      கணிதவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்திலிருந்து தலா 25 மதிபெண்களும் மனத்திறன் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிபெண்கள். தேர்வு நேரம் 2.30 மணி. மனத்திறன் வினாக்கள் 8, 10 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் திறனாய்வுத் தேர்வுகளை ஒப்பிடுகையில் மிகவும் எளிமையானவை.
 
 
    தேர்வு 24.09.2017 ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இவ்வாண்டு எங்கள் பள்ளியிலிருந்து 5 மாணவிகள் சார்பில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. அவர்களது பெயர்கள் பின்வருமாறு:
 
  • பெனாசீர் பேகம் மு
  • கோபிகா செ
  • நிர்மலா அ
  • சுவலெட்சுமி ஶ்ரீ
  • சுவிதா ஆ


     அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் (RMSA) சார்பில் விடுமுறை நாள்களில் திறனாய்வுத் தேர்வுகளுக்காக விடுமுறை நாள்களில் பயிற்சியளிக்கப்படுகிறது. திருவாரூருக்கான பயிற்சி மையம் புலிவலம் அரசு மேனிலைப் பள்ளியில் செயல்படுகிறது. இங்கு 100 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மன்னார்குடியிலும் 100 பேருக்கான ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 
 
     இதில் NMMS, TRUST, NTSE ஆகிய தேர்வுகளில் பங்கேற்கும் பள்ளிக்கு ஒரு மாணவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். எனவே எம்பள்ளியில் தேர்வு எழுதும் 5 மாணவர்களுக்கும் 2015, 2016 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் வழங்கி, தேர்வை சிறப்பான வகையில் எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. NMMS, NTSE தேர்வுகள் குறித்து பின்னர் பதிவிடப்படும்.

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

காட்டூர் அரசு மேனிலைபள்ளி – வரலாறு



காட்டூர் அரசு மேனிலைபள்ளி – வரலாறு


மு.சிவகுருநாதன்





   01.09.2017 அன்று நடைபெறும் தொன்மைப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்கு தயாரிக்கப்பட்ட விவர அறிக்கை.


    திருவாரூர் மாவட்டம் காட்டூர் திருவாரூர் – கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் பவித்திரமணிக்கத்திற்கு  அடுத்துள்ள சிற்றூர். ஊர் என்ற பின்னொட்டாகக் கொண்ட ஊர்ப்பெயர்கள் தமிழகம் மட்டுமல்ல; இந்தியாவெங்கும் உள்ளன. (பார்க்க: சிந்துவெளி இடப்பெயர் ஆய்வுகள், ஆர். பாலகிருஷ்ணன்)


     திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டத்திலுள்ள காட்டூர்களை ஒப்பிடும்போது திருவாரூர் காட்டூர் மிகச்சிறிய கிராமம். காவிரியின் கிளையாறுகளான வெட்டாறு (வடக்கு), ஓடம்போக்கியாறு (தெற்கு) ஆகிய இரண்டு ஆறுகளுக்குட்பட்ட வளமான வண்டல் மண் பூமியே இவ்வூராகும். சிற்றூராட்சியான காட்டூர் விளாகம், காட்டூர் என்ற இரு கிராமங்களைக் கொண்டது.






   காடுகளைக் கொண்ட பகுதியாக இருந்ததனால் இப்பெயர் பெற்றிருக்கக் கூடும். பொதுவாக ஊர்ப்பெயர்கள் பல்வேறு காலகட்டங்களில் அன்றைய சூழலுக்குத் தகுந்தவாறு மாற்றம் பெற்றுள்ளன. (எ.கா. திருமரைக்காடு – திருமறைக்காடு – வேதாரண்யம், மரை – மான்) அதற்கான காரணங்கள் பல உள்ளன. இதுதான் என்று அறுதியிட்டு கூறுவது இயலாது.


     திருவாரூர் – கும்பகோணம் சாலைக்கு இணையாக உள்ள முதலியார் தெரு  கிராமச்சாலையின் வடக்கு, தெற்கு என இருபுறமும் அரசு மேனிலைப் பள்ளி அமைந்துள்ளது.  நிலப்பிரபுத்துவக் கலாச்சாரமுடைய இவ்வூர் இன்று பெரும்பாலும் அடித்தட்டு மற்றும்  நகரை ஓட்டிய அரை நகர (semi – urban) வாழ்விடமாக மாறியுள்ளது.


   முன்னாள் கல்வியமைச்சரும் தி.மு.க. வின் பொதுச்செயலாளர் பேரா. க.அன்பழகன் பிறந்த ஊர் இதுவாகும். முன்னாள் தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்களின் தாயார் அஞ்சுகம் அம்மாளின் நினைவிடத்திற்கு அருகேதான் இப்பள்ளி அமைந்துள்ளது. இவை இப்பள்ளி உயர்நிலை, மேனிலை என தரம் உயர்த்தப்பட்டு வளர்ச்சி பெற்றதற்கான காரணமாகும். பள்ளிக்குத் தேவையான பல்வேறு உதவிகளை தி.மு.க. வைச் சார்ந்தவர்களாலும் மற்றும் அமைப்புகளாலும்  செய்யப்பட்டுள்ளன. இவ்வூரைப் பொருத்த அளவில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சி வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். விடுதலை நாள், குடியரசு நாள் விழாக்களில் காட்டூர், அகரத்திருநல்லூர் கிராமத் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கலந்துகொள்வது இதற்குச் சான்றாகும்.


     21.11.1928 இல் தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டுப் பின்னர் நடுநிலைப்பள்ளியாகி (நாள் தெரியவில்லை.) 27.07.1998 லிருந்து உயர்நிலைப் பள்ளியாகவும் 16.06.2008 லிருந்து மேனிலைப் பள்ளியாகவும் செயல்பட்டுவருகிறது.


     காட்டூர் ஐவர் அவை நிர்வாகத் தொடக்கப்பள்ளி என அழைக்கப்பட்ட இப்பள்ளிக்கு 12.02.1956 இல் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் அப்போதைய சென்னை மாநில பொதுக் கல்விதுறை இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான கல்வெட்டு காணக்கிடைக்கிறது. அப்போது திரு கே.வி.இராமையா ஊர் ஆட்சிமன்றத் தலைவராக இருந்துள்ளார்.


     கட்டிட நிதிக்குழுத் தலைவராக முன்னாள் முதல்வர் திரு மு. கருணநிதி அவர்கள் இருந்துள்ளார். நாடகம் இயற்றி, இயக்கி, நடித்து அதன் மூலம் இக்கட்டிடத்திற்கான தொகையைத் திரட்டியதாகச் சொல்கிறார்கள். இக்கட்டிடத்தை 07.07.1957 இல் முன்னாள் தமிழக முதல்வர் திரு சி.என்.அண்ணாதுரை அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போது இருவரும் சட்டமன்ற உறுப்பினர்கள். அப்போது திரு கு.காமராஜ் அவர்கள் தமிழக முதல்வர்.


   உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பலரிடம் நன்கொடைகள் பெறப்பட்டுள்ளன. அவற்றிற்காக கல்வெட்டுகள் உள்ளன. (அவற்றைக் காண படங்களைப் பார்க்க.) படிப்படியாக வளர்ந்து இன்று புதிய கட்டிடத்தில் பள்ளி இயங்குகிறது. புதிய கட்டிடம் கட்ட இடமில்லாத நிலையில் இக்கட்டிடம் மற்றும் அருகிலுள்ள பழைய கட்டிடங்கள், சுவர்கள் ஆகியவற்றை ஏலமிட்டு இடிக்க முனைந்தபோது கிராம மக்கள் இதன் தொன்மையைக் கூறி இக்கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும், மாறாக இடிக்கக் கூடாது என்று கோரிக்கைகள் வைத்ததால் இடிப்பது தடுக்கப்பட்டது.


(தொடரும்)  

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பிற்காலச் சோழர்கள்

பிற்காலச்  சோழர்கள்




 
.மு.சிவகுருநாதன்
 
 
 
  1.  விஜயாலய சோழன் (கி.பி. 846 – கி.பி. 881) 
  2. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 – கி.பி. 907)
  3. முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 – கி.பி. 953)
  4.  கண்டராதித்த சோழன் (கி.பி. 950 – கி.பி. 957)
  5.  அரிஞ்சய சோழன் (கி.பி. 956 – கி.பி. 957)
  6.  இரண்டாம் பராந்தக சோழன் (கி.பி. 957 – கி.பி. 970)
  7.  உத்தம சோழன் (கி.பி. 970 – கி.பி. 985)
  8.  முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி. 985 – கி.பி. 1014)
  9.  முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 – கி.பி. 1044)
  10.  முதலாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1018 – கி.பி. 1054)
  11.  இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1051 – கி.பி. 1063)
  12.  வீர ராஜேந்திர சோழன் (கி.பி. 1063 – கி.பி. 1070)
  13.  அதி ராஜேந்திர சோழன் (கி.பி. 1067 – கி.பி. 1070)
  14.  முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120)
  15.  விக்கிரம சோழன் (கி.பி. 1118 – கி.பி. 1136)
  16.  இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133 – கி.பி. 1150)
  17.  இரண்டாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1146 – கி.பி. 1163)
  18.  இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1163 – கி.பி. 1178)
  19.  மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 – கி.பி. 1218)
  20.  மூன்றாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1216 – கி.பி. 1256)
  21.  மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246 – கி.பி. 1279) 
 
 
 
சில குறிப்புகள்:
 
 
      பல அரசர்களுக்கு அவர்கள் இளவரசுப் பட்டம் ஆண்டிலிருந்து காலகட்டம் குறிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்க.
 
 
    ஏழாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘தென்னக அரசுகள்’ என்னும் பாடத்தில் 18 மன்னர்கள் பட்டியலிடப்படுகிறார்கள். அதில் ஆதித்தன் (ஆதித்த கரிகாற் சோழன்) (கி.பி. 956 – கி.பி. 966) என்று உள்ளது. இரண்டாம் பராந்தக சோழனின் (கி.பி. 957 – கி.பி. 970) மகனான ஆதித்த கரிகாலன் (கி.பி. 966 – கி.பி. 969) கி.பி. 966 இல் இளவரசு பட்டமேற்று மூன்றாண்டுகளில் கி.பி. 969 இல் படுகொலை செய்யப்பட்டவன். எனவே இவரை அரசர் பட்டியலில் கொள்வது தவறன்றோ!
 
    
       இந்தப் பட்டியலில் முதல் 13 அரசர்கள் விஜயாலய சோழன் (கி.பி. 846 – கி.பி. 881) முதல் அதி ராஜேந்திர சோழன் (கி.பி. 1067 – கி.பி. 1070) ஈறாக 13 பேர்,ஆண் வழிச் சமூக அமைப்பில் விஜயாலய சோழன் மரபாகச் சொல்லப்படுகின்றனர்.
 
     முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120) வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தனுக்கும் முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1012 – கி.பி. 1044) மகள் அம்மங்காதேவிக்கும் பிறந்தவன். இவனும் இவனுக்குப் பின்னால் வரும் 8 அரசர்கள் கீழை சாளுக்கிய மரபினர் ஆவர்.

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நாளிதழ்கள் வாசிப்பு

நாளிதழ்கள் வாசிப்பு


          பள்ளி நூலகத்திலுள்ள  நூல்கள் பெரும்பாலும் மாணவர்கள் வாசிக்க உகந்ததாக இல்லை.  குழந்தை இலக்கிய நூல்கள் அறவே இல்லை. குழந்தை இலக்கியத்துடன் அறிவியல், சூழலியல் போன்ற இன்றையமையாத நூல்களும் வேண்டும்.


      இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு குழந்தைகள் என்றால் வெறும் நீதிக்கதைகளை மட்டும் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நூல்களை வாங்கிக் குவிக்கும் நிலை மாற வேண்டும்.
 
    அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் (RMSA) மூலம் ஆண்டுதோறும் வாங்கும் நூல்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.


      மேலும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் நாளிதழ்கள் வாசிப்பில் ஆர்வம் உண்டாகவும் 'தி இந்து' தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களான  மாயாபஜார், நலம் வாழ, பெண்கள் இன்று, வெற்றிக்கொடி , வணிகவீதி  போன்றவற்றில் அவர்களுக்கு விருப்பமான  பகுதிகளை அவர்களேத் தேர்வு செய்து வாசிக்க சொன்னோம்.
 
      மதிப்புக்கல்விப் (VE) பாடவேளையில் 7 மற்றும்  9 ஆம் வகுப்பு மாணவர்கள் வாசித்த நிகழ்வின் காட்சிப்படங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.












எழுத்து வடிவம்:


மு.சிவகுருநாதன்
  

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

நாளிதழ்களில் தொன்மை சார்ந்த வரலாற்றுச் செய்திகள்


நாளிதழ்களில் தொன்மை சார்ந்த வரலாற்றுச் செய்திகள்



    ஆகஸ்ட் 18, 2017 (18.08.2017) அன்று மாலை 4.30 மணிக்கு எம்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கூடியது. மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பின்வரும் செயல்பாடு உதாரணத்துடன் செய்து காட்டப்பட்டது.






      இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்பார்கள். நாளிதழ்களையும் நல்ல நூல்களையும் வாசிக்கும் பழக்கம் இனிமையானது. அவற்றைக் கைக்கொள்ளவேண்டும்.










   நாளிதழ்களில் அன்றாடம் வெளிவரும் செய்திகளில் பழங்கால வரலாறு  மற்றும் தொன்மை பற்றிய செய்திகள் நிரம்ப உண்டு. அவற்றைச் சேகரித்து, வெட்டி ஒட்டி ஆல்பம் அல்லது  துணுக்குப் புத்தகம் தயாரிக்கும் செயல்பாடு இன்றைய கூட்டத்தில வழங்கப்பட்டது. சில செய்தித் துணுக்குகளில் மாதிரிகள் காண்பிக்கப்பட்டது.

 
எழுத்தாக்கம்:
மு.சிவகுருநாதன்
 
 
 
 

கீழடி தொல்லியல் அகழ்வாய்வு


கீழடி தொல்லியல் அகழ்வாய்வு





 

   ஆகஸ்ட் 11, 2017  (11.08.2017) அன்று மாலை 4.30 மணிக்கு எம்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கூட்டப்பட்டது. மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கீழடி அகழ்வாய்வு குறித்த பல்வேறு செய்திகள் விளக்கப்பட்டன. அது தொடர்பான படங்களும் காட்டப்பட்டது.


 
இந்திய தொல்லியல் ஆய்வுகள்




 

    1920 களில் சிந்து வெளி அகழ்வாய்வுகள் மூலம் வடஇந்தியாவில் இருந்த நகர நாகரிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஹரப்பா, மொகஞ்சதாரோ, மெஹெர்கர் (பாகிஸ்தான்), லோத்தல், தோலவீரா (குஜராத்), களிபங்கன் (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில்  நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் இவை உறுதி செய்யப்பட்டன.




   தமிழகத்திலும் சில இடங்களில்  அகழ்வாய்வுகள் நடந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், புதுச்சேரிக்குத் தெற்கே 6 கி.மீ. தொலைவில் அரிக்கமேடு, பூம்புகார் (கடலடி ஆய்வுகள்) ஆகிய இடங்களில் இந்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.




   இவற்றில் ஹரப்பா போன்ற பெரிய நகர நாகரிகத்தின் சுவடுகள் போலன்றி சிறிய ஆதாரங்களே கிடைத்துள்ளன. மத்திய. மாநில அரசுகளின் பாராமுகம், அரசியல் சார்புத் தன்மையின் விளைவாக இந்த ஆய்வுகள் தொடராமல் பாதியில் நிற்பது வேதனைக்குரியது.
 

  குமரிக்கண்டம் குறித்த தொன்மம் தமிழர்களிடம் நம்பிக்கையாக நிலை பெற்றுள்ளது இதை நிருபிக்க அல்லது மறுக்க பெரிய கடலடி அகழ்வாய்வுகள் தேவை. கீழடியில் நடந்த நிகழ்வுகள் அததகைய நம்பிக்கைகளை எதையும் நமக்குத் தருவதாக இல்லை.

 

கீழடி அகழ்வாய்வு
 

  மதுரைக்கு தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அமைந்துள்ளது. மதுரையிலிருந்து ராமநாதபுரம்  அழகன்குளம் துறைமுகத்திற்குச் செல்லும் பண்டைய வணிகப்பாதையில் மணலூர் கண்மாய் அருகே பள்ளிச்சந்தைத் திடலில் இந்த அகழ்வாய்வு நடத்தப்பட்டது.
 



  இந்த அகழ்வாய்வு மத்திய தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் நடத்தப்பட்டது.
 

  2013 லிருந்து தொடரும் இந்த ஆய்வுகள் வைகையாறு கடலில் கலக்கும் ராமநாதபுரம் தொடங்கி அதன் பாதையின் தேர்வு செய்யப்பட்ட 293 இடங்களில் முந்தைய ஆய்வுகள் நடைபெற்றன.

 

  2015 – 2016 இல் கீழடி தொல் நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. அமர்நாத் ராமகிருஷ்ணனுடன் கிருஷ்ணகிரி அரசுக் கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர், கல்வெட்டு ஆய்வாளர் வேதாச்சலம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.



   இங்கு 48 குழிகள் தோண்டப்பட்டு 5000 க்கு மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் இரண்டு மட்டுமே கார்பன் காலக்கணிப்புக்கு (carbon dating) அனுப்பப்பட்டன. அவற்றின் மூலம் இவற்றில் காலம் கி.மு. 3 – கி.பி. 10 ஆம் நூற்றாண்டுகள் என அறியப்பட்டுள்ளது.
 

  இந்த ஆய்வை மேலும் தொடரவும் இதற்கென கூடுதல் நிதியை ஒதுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதன் காரணம் மிக வெளிப்படையானது. கீழடியில் இப்பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கவும் அதற்கென இடம் ஒதுக்கவும் தமிழக அரசு முடிந்த வரையில் காலம் தாழ்த்தியது. தமிழக பெரும் அரசியல் கட்சிகள் வழக்கம் போல இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
 

   சிறிய அமைப்புகள் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக குறிப்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் எழுத்தாளர் சு.வெங்கடேசன்  ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரைக்குப் பின் சில காரியங்கள் நடந்தன. ‘விகடன் தடம்’ மாத இதழிலும் இவர் எழுதினார். இக்கட்டுரைகள் குறுநூலாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.  
 

    அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ. 151 கோடி நிதியும் புராணங்களில் சொல்லப்படும் இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்க மத்திய அரசு பல்கோடிகளை வாரி இறைக்கிறது. கீழடியுடன் குஜராத்தில் தொடங்கப்பட்ட அகழ்வாய்வில் எவ்வித முன்னேற்றம் இல்லாத நிலையில் அதனைத் தொடர்வதற்கும் கீழடி அகழ்வாய்வை முடித்துக் கொள்ளவும் முடிவு செய்தது. கடும் எதிர்ப்பின் விளைவாக அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றிவிட்டு ஏதோ பெயருக்கு ஆய்வைத் தொடர உத்தரவிட்டுள்ளனர். இம்மாதிரி ஆய்வுகளில் போதிய அனுபவம் இல்லாத ஒருவரை நியமித்ததன் மூலம் கீழடி மீண்டும் புதைக்கப்பட்டுவிட்டது.
 

    பொதுவாக இடுகாட்டில்தான் அதிக ஆய்வுகள் நடந்துள்ளது. இவற்றில் எலும்புகள் போன்றவை கிடைக்கும். ஹரப்பா போன்று மக்கள் வாழ்விடத்ப்தொகுதி இங்கு கிடைத்திருப்பது முக்கியமானது. இந்திய வரலாற்றாய்வில் இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்திருக்கக் கூடிய இப்பகுதிகளில்  ஆய்வுகள் நடத்துவதன் மூலமே பல்வேறு வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.
 

   இங்கு கிடைத்திருப்பவை:

  • உறைகிணறுகள்
  • செங்கற்சுவர்கள்
  • அணிகலன்கள்
  • கூரை ஓடுகள்
  • மட்பாணடங்கள்
  • மிளிர்கல்
  • எலும்புக் கருவிகள்
  • இரும்புக் கருவிகள்
  • தமிழி எழுத்துகள் பொறித்த பானையோடு
  • விலங்கின் காலடித்தடம் பட்ட செங்கல்
  • பளிங்குகள்
  • பச்சை, மஞ்சள் நிற மணிகள்
  • யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள்
  • தாமிர மைதீட்டும் கம்பி
  • எழுத்தாணி
  • சுடுமண் முத்திரைகள்
  • சுடுமண் பொம்மைகள்
  • தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகள்

 

 

எழுத்தாக்கம்:

மு.சிவகுருநாதன்