மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்
மாமல்லபுரம் வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்பு முனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்வது மாமல்லபுரம் எனலாம். சிற்பம் எனும் போது அதனுள் கட்டிடங்கள், அவற்றின் கூறுகள், அலங்கார வடிவங்கள், உருவச் சிற்பங்கள் போன்ற பலவற்றையும் உள்ளடக்குவது இந்திய மரபில் பொதுவாகக் காணப்படுவது. எனினும் மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள் என்னும் இக்கட்டுரை புடைப்புச் சிற்ப வகையில் அமைந்த உருவச் சிற்பங்கள் அவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகள் கதைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சிற்பங்கள் ஆகியவை பற்றியே எடுத்துக்கூறுகின்றது.
துறைமுக நகரம்
பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் புகழ் பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணிக்குரிய கட்டிடங்களும் அமைப்புக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. கல்லிலே கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த கட்டிட வகைகளான குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள் என்பனவும் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த கட்டுமானக் கோயில்களும் இங்கே உள்ளன. இவை வெறும் கட்டிடங்களாக மட்டுமன்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றன.கல்லில் செதுக்கப்பட்டவை
மாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவை. இவை கடவுளரின் உருவங்கள், புராணக் கதை நிகழ்வுகள் என்பவற்றுடன் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் கூடப் படம்பிடித்துக் காட்டுகின்றன எனலாம். இங்கே காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களாகவே காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தனவாகும்.அர்ச்சுனன் தபசு
சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அருச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எல பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டிக்கலாம் என தெரிகிறது. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.மகிஷாசுரமர்த்தினி சிற்பம்
கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம். இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை. இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ அறிவித்தது.நன்றி: விக்கிபீடியா
படங்கள்:மு.சிவகுருநாதன்
வழங்கியோர் :
வழங்கியோர் :
மு.சிவகுருநாதன்
சமூக அறிவியல்
மற்றும்
மற்றும்
தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள்,
அரசு மேனிலைப்பள்ளி, காட்டூர்-610104
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக