ஆகஸ்ட் 11, 2017 (11.08.2017) அன்று மாலை 4.30 மணிக்கு எம்பள்ளியின்
தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கூட்டப்பட்டது. மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில்
கீழடி அகழ்வாய்வு குறித்த பல்வேறு செய்திகள் விளக்கப்பட்டன. அது தொடர்பான படங்களும்
காட்டப்பட்டது.
1920 களில்
சிந்து வெளி அகழ்வாய்வுகள் மூலம் வடஇந்தியாவில் இருந்த நகர நாகரிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹரப்பா, மொகஞ்சதாரோ, மெஹெர்கர் (பாகிஸ்தான்), லோத்தல், தோலவீரா (குஜராத்), களிபங்கன்
(ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் நடைபெற்ற தொல்லியல்
அகழ்வாய்வுகளில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் இவை உறுதி செய்யப்பட்டன.
தமிழகத்திலும் சில இடங்களில் அகழ்வாய்வுகள் நடந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம்
ஶ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், புதுச்சேரிக்குத் தெற்கே 6 கி.மீ. தொலைவில் அரிக்கமேடு,
பூம்புகார் (கடலடி ஆய்வுகள்) ஆகிய இடங்களில் இந்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
இவற்றில் ஹரப்பா போன்ற பெரிய நகர நாகரிகத்தின்
சுவடுகள் போலன்றி சிறிய ஆதாரங்களே கிடைத்துள்ளன. மத்திய. மாநில அரசுகளின் பாராமுகம்,
அரசியல் சார்புத் தன்மையின் விளைவாக இந்த ஆய்வுகள் தொடராமல் பாதியில் நிற்பது வேதனைக்குரியது.
குமரிக்கண்டம் குறித்த தொன்மம் தமிழர்களிடம் நம்பிக்கையாக
நிலை பெற்றுள்ளது இதை நிருபிக்க அல்லது மறுக்க பெரிய கடலடி அகழ்வாய்வுகள் தேவை. கீழடியில்
நடந்த நிகழ்வுகள் அததகைய நம்பிக்கைகளை எதையும் நமக்குத் தருவதாக இல்லை.
கீழடி அகழ்வாய்வு
மதுரைக்கு தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை
மாவட்டத்தில் கீழடி அமைந்துள்ளது. மதுரையிலிருந்து ராமநாதபுரம் அழகன்குளம் துறைமுகத்திற்குச் செல்லும் பண்டைய வணிகப்பாதையில்
மணலூர் கண்மாய் அருகே பள்ளிச்சந்தைத் திடலில் இந்த அகழ்வாய்வு நடத்தப்பட்டது.
இந்த அகழ்வாய்வு மத்திய தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர்
திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் நடத்தப்பட்டது.
2013 லிருந்து தொடரும் இந்த ஆய்வுகள் வைகையாறு கடலில்
கலக்கும் ராமநாதபுரம் தொடங்கி அதன் பாதையின் தேர்வு செய்யப்பட்ட 293 இடங்களில் முந்தைய
ஆய்வுகள் நடைபெற்றன.
2015 – 2016 இல் கீழடி தொல் நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.
அமர்நாத் ராமகிருஷ்ணனுடன் கிருஷ்ணகிரி அரசுக் கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள்
அடங்கிய குழுவினர், கல்வெட்டு ஆய்வாளர் வேதாச்சலம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இங்கு 48 குழிகள் தோண்டப்பட்டு 5000 க்கு மேற்பட்ட
பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் இரண்டு மட்டுமே கார்பன் காலக்கணிப்புக்கு (carbon
dating) அனுப்பப்பட்டன. அவற்றின் மூலம் இவற்றில் காலம் கி.மு. 3 – கி.பி. 10 ஆம் நூற்றாண்டுகள்
என அறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேலும் தொடரவும் இதற்கென கூடுதல் நிதியை
ஒதுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதன் காரணம் மிக வெளிப்படையானது. கீழடியில்
இப்பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கவும் அதற்கென இடம் ஒதுக்கவும் தமிழக அரசு
முடிந்த வரையில் காலம் தாழ்த்தியது. தமிழக பெரும் அரசியல் கட்சிகள் வழக்கம் போல இவற்றைக்
கண்டுகொள்ளவில்லை.
சிறிய அமைப்புகள் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக
குறிப்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் எழுத்தாளர்
சு.வெங்கடேசன் ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய
கட்டுரைக்குப் பின் சில காரியங்கள் நடந்தன. ‘விகடன் தடம்’ மாத இதழிலும் இவர் எழுதினார்.
இக்கட்டுரைகள் குறுநூலாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ.
151 கோடி நிதியும் புராணங்களில் சொல்லப்படும் இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்க
மத்திய அரசு பல்கோடிகளை வாரி இறைக்கிறது. கீழடியுடன் குஜராத்தில் தொடங்கப்பட்ட அகழ்வாய்வில்
எவ்வித முன்னேற்றம் இல்லாத நிலையில் அதனைத் தொடர்வதற்கும் கீழடி அகழ்வாய்வை முடித்துக்
கொள்ளவும் முடிவு செய்தது. கடும் எதிர்ப்பின் விளைவாக அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றிவிட்டு
ஏதோ பெயருக்கு ஆய்வைத் தொடர உத்தரவிட்டுள்ளனர். இம்மாதிரி ஆய்வுகளில் போதிய அனுபவம்
இல்லாத ஒருவரை நியமித்ததன் மூலம் கீழடி மீண்டும் புதைக்கப்பட்டுவிட்டது.
பொதுவாக
இடுகாட்டில்தான் அதிக ஆய்வுகள் நடந்துள்ளது. இவற்றில் எலும்புகள் போன்றவை கிடைக்கும்.
ஹரப்பா போன்று மக்கள் வாழ்விடத்ப்தொகுதி இங்கு கிடைத்திருப்பது முக்கியமானது. இந்திய
வரலாற்றாய்வில் இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்திருக்கக்
கூடிய இப்பகுதிகளில் ஆய்வுகள் நடத்துவதன் மூலமே
பல்வேறு வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.
இங்கு
கிடைத்திருப்பவை:
- உறைகிணறுகள்
- செங்கற்சுவர்கள்
- அணிகலன்கள்
- கூரை ஓடுகள்
- மட்பாணடங்கள்
- மிளிர்கல்
- எலும்புக் கருவிகள்
- இரும்புக் கருவிகள்
- தமிழி எழுத்துகள் பொறித்த பானையோடு
- விலங்கின் காலடித்தடம் பட்ட செங்கல்
- பளிங்குகள்
- பச்சை, மஞ்சள் நிற மணிகள்
- யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள்
- தாமிர மைதீட்டும் கம்பி
- எழுத்தாணி
- சுடுமண் முத்திரைகள்
- சுடுமண் பொம்மைகள்
- தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகள்
எழுத்தாக்கம்:
மு.சிவகுருநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக