பாடத்திட்டத்தைத் தாண்டிய வாசிப்பை இன்றைய கல்வியமைப்பு,
பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வித்துறை ஆகிய கிட்டத்தட்ட தடையே செய்திருக்கின்றன.
தேர்வு மய்யமான மதிப்பெண் கல்வி, பாடநூல் கருத்துகளை மட்டும் மனப்பாடம் செய்து அறிவு
கிடைப்பதான ஒரு பாவனைக்குள் சிக்கிச் சீரழிகின்றது இன்றைய சமூகம்.
மாணவர்கள் படிக்கவில்லை என்று குறைபட்டுகொள்ளும்
ஆசிரிய சமூகம் புதிதாக என்ன படிக்கிறது என்று கேட்டால் பதிலிருக்காது. படித்துப் பட்டம்
பல வாங்கியாயிற்றல்லவா! இனி படிப்பதெப்படி? என்பதே அவர்கள் வாதம். நீள நீளமாக பட்டங்களைப்
போட்டுக் கொள்வதோடு அவர்களது அறிவு நின்றுவிடுகிறது.
பாடத்திட்டம், பாடநூல் தாண்டிய வாசிப்பு சாத்தியப்படும்
சூழலை உருவாக்கித் தராத கல்வி நமக்கு தேவையேயில்லை. தேர்வுகள், மதப்பெண்கள் சார்ந்த
பாடங்களுக்கு 7 பாடவேளைகள் வேண்டும் என்று கேட்கின்ற அனைவரும் விளையாட்டு, இசை, ஓவியம்,
நூலக வாசிப்பு போன்ற அனைத்து கல்வி இணைச் செயல்பாடுகளை விழுங்கிவிடுவதுதான் நடக்கிறது.
பொது நூலகங்களில்கூட சில நல்ல நூல்கள் கிடைக்கும்.
ஆனால் பள்ளி நூலகங்களில் இருப்பதோ குப்பைகள். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின்
(RMSA) கீழ் ஒவ்வொரு அரசுப்பள்ளிக்கும் ரூ. 10,000 மதிப்பிலான நூல்கள் வாங்க அனுமதியுண்டு.
‘கமிஷன்’ அடிப்படையில் மாவட்டந்தோறும் வாங்கப்படும் நூல்கள் அனைத்தும் குப்பைகள். இவை
மாணவர்கள் வாசிக்க லாயக்கற்றவை. கோடிக்கணக்கான பணம் கல்வித்துறையில் இவ்விதம் ஊழலால்
சீரழிகிறது.
போட்டித்தேர்வுகளுக்கு நூல்களுக்கு வாங்கிக்குவிக்கும்
பழக்கமும் உண்டு. NMMS, ஊரகத் திறனாய்வு, NTSE போன்ற போட்டித்தேர்வுகளுக்கும் “நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்”, என்று ஆசைகாட்டும்
சுயமுன்னேற்ற நூல்களும் ஜோதிட உள்ளிட்ட பல்வேறு மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பல நூற்கள் பள்ளி நூலகங்களில்
அடைந்து கிடக்கின்றன. ஒரே நூலை அட்டைப்படம், தலைப்பை மாற்றி வெவ்வேறு பெயர்களில் வெளிவந்த
‘கமிஷன்’ நூல்கள் பலவுண்டு. இதன் மூலம் கல்வி உருப்படுமென்று நம்ப இயலவில்லை.
மாணவர்கள் விரும்பாத இந்த நூல்களை தலைக்கு ஒன்றாக
கட்டி படித்துவருமாறு காட்டாயப் படுத்துவது எவ்வளவோ பெரிய கொடுமை; வன்முறை. இதில் எனக்கு
துளியும் உடன்பாடில்லை. வகுப்பாசிரியர்களைக் கொண்டு இந்த கட்டாயத் திணிப்பை மேற்கொள்வது
நியாயமல்ல.
இதனைத் தடுக்க எங்கள் பள்ளி ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’
பிரிவிற்கு எனது சொந்த நூலகத்திலிருந்து சிறார் கதைகள், சூழலியல், அறிவியல், கல்வி,
வரலாறு தொடர்பான நூல்களை அளித்து வாசிக்கவும்
குறிப்பு எழுதி வரவும் சொன்னபோது மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதை அறிய முடிந்தது.
இதுவரையில் சுமார் 100 நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அது தொடர்பான சில படங்களும்
இப்பகுதியில் வெளியிடப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக