புதன், 8 நவம்பர், 2017

நவம்பர் 14 – குழந்தைகள் நாள்: ஒரு வேண்டுகோள்


நவம்பர் 14 – குழந்தைகள் நாள்: ஒரு வேண்டுகோள்

 

மு.சிவகுருநாதன்


     ஆசிரியர் தினம் கொண்டாடும் பள்ளிகள் பல குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதில்லை. கல்வியும் பள்ளிகளும் குழந்தைகளுக்கானதாக இல்லை. குழந்தைகள் இவைகளிடமிருந்து அந்நியப்பட்டே உள்ளனர். கல்வியின் அனைத்து தளங்களையும் குழந்தைகளுக்கானதாக மாற்ற இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.


      திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் 300 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இதில் 100 பேர் மேனிலை மாணவர்கள். 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் 200 மாணவர்கள் உள்ளனர். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதாரண மக்களின் குழந்தைகளே இங்கு கல்வி கற்கின்றனர்.


   இப்பள்ளிகளுக்கான தேவைப் பட்டியல் அளவில்லாதது. அவற்றில் சில.


  1. பள்ளி வளாகச் சுற்றுச்சுவர்.
  2. குடிநீர் வசதி.
  3. தண்ணீருடன் கூடிய கழிவறை வசதி.
  4. சமூக விரோதிகளிடமிருந்து பள்ளியைப் பாதுகாக்க இரவுக் காவலர் பணியிடம்.
  5. புதிய, தூய்மையான சத்துணவுக் கூடம்.
  6. கூடுதல் கட்டிடங்கள்.
  7. உடலுக்குக் கேடு விளைவிக்கும் ஆஸ்பெட்டாஸ் கூரை இல்லாத வகுப்பறைகள்.
  8. சிதைலமடைந்த கட்டடங்கள் இடிக்கப் பட்டு வளாகம் தூய்மைப்படுத்தப் படுதல்.
  9. இரண்டு முன்னாள் தமிழக முதல்வர்கள் திரு சி.என்.அண்ணாதுரை, திரு மு.கருணாநிதி ஆகியோர் தொடர்புடைய கட்டடம் ஒன்றைத்தவிர எஞ்சிய  பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திப் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் எடுத்தல்.
  10. மேனிலையில் கணினிப் பிரிவுகள். நிரந்தர ஆசிரியர் பணியிடம். 
  11. மேனிலையில் வரலாறு, பொருளியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகள், அதற்குரிய ஆசிரியர் பணியிடங்கள்.
  12. ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகம்.
  13. மாணவர்களுக்கு கூரையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம்.
  14. புதிய கட்டட இடிபாடுகள் மற்றும் பழுதுகளைச் சீரமைத்தல்.
  15. பள்ளி நூலகத்திற்கு நல்ல நூல்கள், தனி நூலக அறை வசதி.

 

     என நீளும் பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. இவற்றில் பல கருத்துரிமைப் பெட்டியின் வாயிலாக மாணவர்கள் வெளிப்படுத்திய கோரிக்கைகள். இவைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசால் மட்டுமே முடியும். ஏனெனில் அதிகம் செலவாகக் கூடியத் திட்டங்கள் இவை.


       1998, 2008 ஆகிய ஆண்டுகளில் திரு மு. கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது முறையே உயர்நிலை, மேனிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. நபார்டு கடனுதவியின் கீழ் சுமார் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் 9 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் 2016 இல் கட்டப்பட்டுள்ளன. அதற்குரிய இடத்தை தி.மு.க. வினர், முரசொலி அறக்கட்டளை, உள்ளூர் மக்களுடன் இணைந்து வாங்கித் தந்துள்ளனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் மாடியில் இரு வகுப்பறைக் கட்டடமும் ரூ. 6.75 லட்சத்தில் கலையரங்கம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் உள்ளன. இவற்றை நல்ல முறையில் பாதுகாத்து, பராமரிக்க மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பாரின் ஆதரவு தேவைப்படுகிறது.


   பள்ளி நூலகத்திற்கு நல்ல நூல்கள் தேவை. இருக்கின்ற   நூல்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் (RMSA) கீழ் வாங்கப்பட்ட நூல்கள் குழந்தைகளுக்கானதாகவும், தரமானதாகவும் இல்லை என்பது மிகவும் வருந்தற்குரியது.


   பள்ளி மாணவர்களின் குடும்பச் சூழல் நல்ல நூல்களை, நாளிதழ்களை வாங்கிப் படிக்கும் அளவில் இல்லை. மாணவர்களுக்கு நல்ல நூல்களைப் பரிசளிப்பதும், நூலகத்திற்கு நல்ல நூல்களை வழங்குவதும் மிகவும் இன்றியமையாத, நம்மால் இயலும் பணியாக உள்ளது.


   சென்ற மாதம் இப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியை திருமதி உல.சுமதி அவர்கள் தனது சேமிப்பில் இருந்த நூல்களை பள்ளி நூலகத்திற்கு வழங்கினார். அவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.


   நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் (சென்னை) 50% கழிவில் குழந்தைகளுக்காக பல நல்ல நூல்களை விற்பனை செய்கிறது.


   குறைந்த பட்சம் ரூ. 2000 க்கு வாங்கினால் இந்தக் கழிவு கிடைக்கிறது. ரூ. 2000 க்கு ரூ. 4000 மதிப்பிலான நூல்களை வாங்க முடியும். இன்னும் சில நாள்களே இருப்பதால் உடனடியாக செயல்பட வேண்டியுள்ளது. இந்தத் தருணத்தில் இயலாதபட்சத்தில் ஏப்ரல் 23 உலக புத்தக நாளுக்கும் இதேபோல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


   பள்ளி நூலகத்திற்கும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கவும் நூல்களை அன்பளிப்பாக வழங்க முன்வருமாறு இதன்மூலம் வேண்டுகின்றோம். இது குறித்து தங்களது  கருத்துகளையும் எதிர்பார்க்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக