காட்டூர் அரசு மேனிலைபள்ளி – வரலாறு
01.09.2017 அன்று நடைபெறும் தொன்மைப் பாதுகாப்பு
மன்றக் கூட்டத்திற்கு தயாரிக்கப்பட்ட விவர அறிக்கை.
திருவாரூர் மாவட்டம் காட்டூர் திருவாரூர் – கும்பகோணம்
சாலையில் திருவாரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் பவித்திரமணிக்கத்திற்கு அடுத்துள்ள சிற்றூர். ஊர் என்ற பின்னொட்டாகக் கொண்ட
ஊர்ப்பெயர்கள் தமிழகம் மட்டுமல்ல; இந்தியாவெங்கும் உள்ளன. (பார்க்க: சிந்துவெளி இடப்பெயர்
ஆய்வுகள், ஆர். பாலகிருஷ்ணன்)
திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டத்திலுள்ள காட்டூர்களை
ஒப்பிடும்போது திருவாரூர் காட்டூர் மிகச்சிறிய கிராமம். காவிரியின் கிளையாறுகளான வெட்டாறு
(வடக்கு), ஓடம்போக்கியாறு (தெற்கு) ஆகிய இரண்டு ஆறுகளுக்குட்பட்ட வளமான வண்டல் மண்
பூமியே இவ்வூராகும். சிற்றூராட்சியான காட்டூர் விளாகம், காட்டூர் என்ற இரு கிராமங்களைக்
கொண்டது.
காடுகளைக் கொண்ட பகுதியாக இருந்ததனால் இப்பெயர்
பெற்றிருக்கக் கூடும். பொதுவாக ஊர்ப்பெயர்கள் பல்வேறு காலகட்டங்களில் அன்றைய சூழலுக்குத்
தகுந்தவாறு மாற்றம் பெற்றுள்ளன. (எ.கா. திருமரைக்காடு – திருமறைக்காடு – வேதாரண்யம்,
மரை – மான்) அதற்கான காரணங்கள் பல உள்ளன. இதுதான் என்று அறுதியிட்டு கூறுவது இயலாது.
திருவாரூர்
– கும்பகோணம் சாலைக்கு இணையாக உள்ள முதலியார் தெரு கிராமச்சாலையின் வடக்கு, தெற்கு என இருபுறமும் அரசு
மேனிலைப் பள்ளி அமைந்துள்ளது. நிலப்பிரபுத்துவக்
கலாச்சாரமுடைய இவ்வூர் இன்று பெரும்பாலும் அடித்தட்டு மற்றும் நகரை ஓட்டிய அரை நகர (semi – urban) வாழ்விடமாக
மாறியுள்ளது.
முன்னாள் கல்வியமைச்சரும் தி.மு.க. வின் பொதுச்செயலாளர்
பேரா. க.அன்பழகன் பிறந்த ஊர் இதுவாகும். முன்னாள் தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி
அவர்களின் தாயார் அஞ்சுகம் அம்மாளின் நினைவிடத்திற்கு அருகேதான் இப்பள்ளி அமைந்துள்ளது.
இவை இப்பள்ளி உயர்நிலை, மேனிலை என தரம் உயர்த்தப்பட்டு வளர்ச்சி பெற்றதற்கான காரணமாகும்.
பள்ளிக்குத் தேவையான பல்வேறு உதவிகளை தி.மு.க. வைச் சார்ந்தவர்களாலும் மற்றும் அமைப்புகளாலும்
செய்யப்பட்டுள்ளன. இவ்வூரைப் பொருத்த அளவில்
தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சி வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக பள்ளி வளர்ச்சிக்கு
உறுதுணையாக இருந்து வருகின்றனர். விடுதலை நாள், குடியரசு நாள் விழாக்களில் காட்டூர்,
அகரத்திருநல்லூர் கிராமத் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கலந்துகொள்வது இதற்குச்
சான்றாகும்.
21.11.1928 இல் தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டுப்
பின்னர் நடுநிலைப்பள்ளியாகி (நாள் தெரியவில்லை.) 27.07.1998 லிருந்து உயர்நிலைப் பள்ளியாகவும்
16.06.2008 லிருந்து மேனிலைப் பள்ளியாகவும் செயல்பட்டுவருகிறது.
காட்டூர் ஐவர் அவை நிர்வாகத் தொடக்கப்பள்ளி என
அழைக்கப்பட்ட இப்பள்ளிக்கு 12.02.1956 இல் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் அப்போதைய
சென்னை மாநில பொதுக் கல்விதுறை இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்கான கல்வெட்டு காணக்கிடைக்கிறது. அப்போது திரு கே.வி.இராமையா ஊர் ஆட்சிமன்றத் தலைவராக
இருந்துள்ளார்.
கட்டிட நிதிக்குழுத் தலைவராக முன்னாள் முதல்வர் திரு
மு. கருணநிதி அவர்கள் இருந்துள்ளார். நாடகம் இயற்றி, இயக்கி, நடித்து அதன் மூலம் இக்கட்டிடத்திற்கான
தொகையைத் திரட்டியதாகச் சொல்கிறார்கள். இக்கட்டிடத்தை 07.07.1957 இல் முன்னாள் தமிழக
முதல்வர் திரு சி.என்.அண்ணாதுரை அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போது இருவரும்
சட்டமன்ற உறுப்பினர்கள். அப்போது திரு கு.காமராஜ் அவர்கள் தமிழக முதல்வர்.
உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பலரிடம் நன்கொடைகள்
பெறப்பட்டுள்ளன. அவற்றிற்காக கல்வெட்டுகள் உள்ளன. (அவற்றைக் காண படங்களைப் பார்க்க.)
படிப்படியாக வளர்ந்து இன்று புதிய கட்டிடத்தில் பள்ளி இயங்குகிறது. புதிய கட்டிடம்
கட்ட இடமில்லாத நிலையில் இக்கட்டிடம் மற்றும் அருகிலுள்ள பழைய கட்டிடங்கள், சுவர்கள்
ஆகியவற்றை ஏலமிட்டு இடிக்க முனைந்தபோது கிராம மக்கள் இதன் தொன்மையைக் கூறி இக்கட்டிடத்தை
புதுப்பிக்க வேண்டும், மாறாக இடிக்கக் கூடாது என்று கோரிக்கைகள் வைத்ததால் இடிப்பது
தடுக்கப்பட்டது.
(தொடரும்)