வியாழன், 21 செப்டம்பர், 2017

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) 2017


தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) 2017
 

மு.சிவகுருநாதன்
 

     தேசிய திறனாய்வுத் தேர்வு (National Talent Search Examination) என்பது 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வு ஆகும். இதில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.500 கிடைக்கும். அம்மாணவனுக்கு முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) வரைக்கும் வரை இந்த உதவித்தொகை உண்டு.
 

    இந்த தேர்வை 10 -ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே மட்டுமே எழுத முடியும். 9 -ம் வகுப்பு முழுப் பாடத்திட்டத்திலும், 10 -ம் வகுப்பில் நவம்பர் வரையிலான பாடத்திட்டத்திலும் வினாக்கள் இருக்கும்.    முதலில் மாநில அளவில் ஒரு தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவில் இறுதித் தேர்வும் (CBSE syllabus) நடத்தப்படும்.  ஒருவகையில் இதுவும் நீட் தேர்வு போலத்தான்!
 

   தமிழக அரசு நடத்தும் முதல் கட்டத் தேர்வு மூலம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசியத் தேர்வில் தரப்பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களுக்குள் வந்துவிட்டால் உதவித்தொகை கிடைக்கலாம்.
 

    இதில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 40 இடங்கள் மட்டுமே. குறிப்பிட்ட மாநிலங்களில் தகுதியான மாணவர்கள் கிடைக்காதபட்சத்தில், அதிக மதிப்பெண் பெற்றுள்ள மற்ற மாநில மாணவர்களுக்கும் கூடுதல் இடம் கிடைக்கும். எப்போதாவது தமிழகத்திற்கு கூடுதல் இடம் கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் யாரும் தேர்வாகவில்லை.
 

   இத்தேர்வில் தேர்வாகும்  மாணவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக் கழகங்களில் பட்ட மேற்படிப்பு படிக்கலாம் என்பது இந்தத் தேர்வின் கூடுதல் பலன்.
 

  இத்தேர்வை எழுத வருமான உச்சவரம்பு இல்லை. அனைவரும் எழுதலாம். மாநில அளவிலான தேர்வு இரண்டாக உள்ளது.  
 

SAT (Scholastic Aptitude Test)

   (9, 10 பாடங்களில் இருந்து வினாக்கள்)

MAT (Mental Aptitude Test)

(மனத்திறன் தேர்வு)

 

   இத்தேர்வு எழுத திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 5 மாணவிகள் சார்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின்  பெயர்கள் பின்வருமாறு:
 

  • சந்தியா    
  • அபிதா     
  • காவியா  
  • சஷ்டிதா   கோ
  • லெட்சுமி   
 

   தேர்வுக்கட்டணம் ரூ.50. இத்தேர்வு நவம்பர் 05 (05.11.2017) ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
 

   இம்மாணவர்களுக்கு சென்ற ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் வினாத்தாள்கள் கொண்டு பள்ளியிலேயே சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 2017

ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 2017
                மு.சிவகுருநாதன்


         ஊரகத் திறனாய்வுத் தேர்வு அழைக்கப்படும் இந்தத் தேர்வு, கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. டிரஸ்ட் (TRUST) தேர்வு எனப்படும் இத்தேர்வை 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் எழுதலாம்.

      ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்களும், 50 மாணவிகளும் தேர்வு செய்யப் படுகிறார்கள். அவர்கள் +2 படிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1,000 என நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 4000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.


      1990 லிருந்து 27 ஆண்டுக்களாக இந்தத் தொகை உயர்த்தப்படவில்லை. இதனால் இத்தேர்வுகளில் பங்கு பெறுவோரின் ஆர்வம் குறைந்துள்ளது. இதை உயர்த்தி கணிசமாக தொகையையை வழங்குவதே பொருத்தமாக இருக்க முடியும். பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ. 15000 லிருந்து ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.


    எட்டாம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் இத்தேர்வை எழுத முடியும். ஊரகப் பள்ளி மாணவர்கள் மட்டுமே இத்தேர்வில் பங்கு பெறமுடியும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.


     மொழிப்பாடங்கள் தவிர்த்து எட்டாம் வகுப்புப் பாடங்களிலிருந்து 100 சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வினாக்கள் மட்டுமே கேட்கப்படும். OMR தாளில் வட்டமிட்ட A, B, C, D ஐ பால்பாயிண்ட் பேனாவால் நிழலிட்டுக் (shading) காட்டவேண்டும்.



      கணிதவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்திலிருந்து தலா 25 மதிபெண்களும் மனத்திறன் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிபெண்கள். தேர்வு நேரம் 2.30 மணி. மனத்திறன் வினாக்கள் 8, 10 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் திறனாய்வுத் தேர்வுகளை ஒப்பிடுகையில் மிகவும் எளிமையானவை.
 
 
    தேர்வு 24.09.2017 ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இவ்வாண்டு எங்கள் பள்ளியிலிருந்து 5 மாணவிகள் சார்பில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. அவர்களது பெயர்கள் பின்வருமாறு:
 
  • பெனாசீர் பேகம் மு
  • கோபிகா செ
  • நிர்மலா அ
  • சுவலெட்சுமி ஶ்ரீ
  • சுவிதா ஆ


     அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் (RMSA) சார்பில் விடுமுறை நாள்களில் திறனாய்வுத் தேர்வுகளுக்காக விடுமுறை நாள்களில் பயிற்சியளிக்கப்படுகிறது. திருவாரூருக்கான பயிற்சி மையம் புலிவலம் அரசு மேனிலைப் பள்ளியில் செயல்படுகிறது. இங்கு 100 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மன்னார்குடியிலும் 100 பேருக்கான ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 
 
     இதில் NMMS, TRUST, NTSE ஆகிய தேர்வுகளில் பங்கேற்கும் பள்ளிக்கு ஒரு மாணவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். எனவே எம்பள்ளியில் தேர்வு எழுதும் 5 மாணவர்களுக்கும் 2015, 2016 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் வழங்கி, தேர்வை சிறப்பான வகையில் எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. NMMS, NTSE தேர்வுகள் குறித்து பின்னர் பதிவிடப்படும்.