செவ்வாய், 7 டிசம்பர், 2010

லூ. அருள்ஜெனிபர் (8 ‘அ’ பிரிவு) எழுதிய கட்டுரை.



தொன்மைப்பாதுகாப்பு மன்றம் - களப்பயணம்
                                                                
                                                                            - லூ. அருள்ஜெனிபர் (8 ‘அ’ பிரிவு)

தீபங்குடி சமணர் கோயில் :

    எம்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் இன்று (14.10.2010) நாங்கள் தீபங்குடியில் உள்ள பழமை வாய்ந்த சமணர் கோயிலான அருள்மிகு. தீபநாயக சுவாமி ஆலயத்திற்குச் சென்றோம்.  இது முதலாவது தீர்த்தங்கரர் ஆதிபகவான் (ரி­ப தேவர்) கோயிலாகும்.  இந்த சமணர் கோயில் களப்பிரர் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று எங்களது ஆசிரியர் கூறினார்.    அதன்படி இந்த கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று சொல்ல முடியும். 

    கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி ஆகும்.   சமணர்கள் தீபங்களை வழிபடுவதால் தீபங்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.  மயிலை.சீனி.வேங்கடசாமி என்பவர் தீபங்குடியில் உள்ள சமணர் கோயிலைப் பற்றிக் கூறியுள்ளார்.  சமண மதத்தைச் சேர்ந்த பத்து குடும்பங்கள் இங்கு இருக்கின்றன.

    24வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர்.  திகம்பரர்கள் ஆடை அணிய மாட்டார்கள்.  பொங்கல், தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகைகளை இவர்கள் கொண்டாடுவார்கள்.  இங்கு பழமை வாய்ந்த கிணறு ஒன்று உள்ளது. பழமை வாய்ந்த சமையலறை உள்ளது.   இது அக்காலத்தில் வழிப்போக்கர்களுக்கு உணவு அளிக்கப் பயன்பட்டிருக்கும்.

    தமிழகத்தின் மிகப் பழமையான கோயில் ஒன்றை சுற்றிப் பார்த்து, கண்டு ரசித்து, தகவல்களைச் சேகரித்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

(குறிப்பு: அர்ச்சகர் திரு.பர்சுவநாதன் அவர்களிடம் இம்மாணவி 24 தீர்த்தங்கரர்களின் பெயரைக் கேட்டு பதிவு செய்திருக்கிறார்.  ஆனால் அப்பட்டியல் வரிசைக்கிரமமாக இல்லை.  எனவே அப்பட்டியல் நீக்கப்பட்டுள்ளது.  முழுப் பட்டியல் அறிக்கையில் உள்ளது)


   

   

பெரும்பண்ணையூர் மாதா கோயில்:

    இந்த ஆலயம் திரு.பெஷோ (PECHEUR ) அவர்களால் 14.04.1872 ஆம் ஆண்டு அடிக்கல் இடப்பட்டது.  திரு.மு.சின்னு உடையார் அவர்களால் 14 ஆண்டுகள் கட்டப்பட்டு, அதன் பிறகு திரு.அ.மு.பெரியசாமி உடையார் அவர்களால் 1915 - 1919 ஆண்டுகளில் முடிக்கப் பெற்றது.

    இந்த மாதாக் கோயிலில் பெரிய மணி ஒன்று உள்ளது.  மாதா கோயில் வாயிலில் மிகப் பெரிய தேன் கூடு ஒன்று உள்ளது.   கட்டிடம் சரியாக பராமரிக்கப்படாமல் சிதைவடைந்த நிலையில் உள்ளது.

திருக்கண்ணமங்கை பெருமாள் கோயில்:

    திருக்கண்ணமங்கை ஸ்ரீபக்வத்சலப் பெருமாள் கோயில் திருப்பதிக்கு இணையான 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.  இது ஒரு வைணவக் கோயில் ஆகும்.  இக்கோயில் ஒரு மாதத்திற்கு முன்பு குடமுழுக்கு செய்யப்பட்டது.

    கோயில் திறக்காமல் இருந்ததால் உள்ளே செல்லாமல் திரும்பினோம்.  அதன் அருகில் ஒரு பாழடைந்த மடத்தைப் பார்த்தோம்.  அது மிகப் பழமையானதாக இருந்தது.  அதில் என்ன கோயில் இருந்தது என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக